செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடென்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் - ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

Published On 2020-05-02 06:24 GMT   |   Update On 2020-05-02 06:24 GMT
செனட்சபையின் முன்னாள் ஊழியரான தாரா ரீட் என்ற பெண், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடென் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோ பிடென். இவர் வருகிற நவம்பர் 3-ந்தேதி நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. முன்னதாக இவர் கடந்த ஆண்டு ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் களம் இறங்கியபோதே ஏராளமான பெண்கள் இவர் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர்.

நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (வயது 39), ஜோ பிடெனின் முன்னாள் உதவியாளரான எமி லேப்போஸ் (43), வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியரான வைல் கோனெர்ட் உள்பட 7 பெண்கள் ஜோ பிடென், அனுமதியின்றி தங்களை தொட்டதாகவும், வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தி இருந்தனர்.

எனினும் இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஜோ பிடெனின் பிரசாரத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஜனநாயக கட்சியினரிடம் அவருக்கு ஏகோபித்த ஆதரவு இருப்பதால் கட்சி வேட்பாளருக்கான தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில், செனட்சபையின் முன்னாள் ஊழியரான தாரா ரீட் என்ற பெண், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஜோ பிடெனுக்கு உதவியாளராக பணிபுரிந்தபோது அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.

இது, அமெரிக்க தேர்தல் களத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜோ பிடெனின் பிரசாரக் குழு, இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதேபோல் ஜோ பிடெனும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

தாரா ரீட் கூறுவதை போல் ஒருபோதும் நடக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News