செய்திகள்
சந்தையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம்

சிரியாவில் சந்தையில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி

Published On 2020-04-30 12:41 GMT   |   Update On 2020-04-30 12:41 GMT
சிரியாவில் சந்தையில் நடந்த குண்டு வெடிப்பில் 40 பேர் பலியாகினர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.

இதற்கிடையே உள்நாட்டு போர் தொடங்கிய காலக்கட்டத்தில் குர்து இன போராளிகள் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தன்னிச்சையாக ஆட்சி நடத்த தொடங்கினர்.

ஆனால் சிரியாவின் அண்டை நாடான துருக்கி குர்து இன போராளிகளை பயங்கரவாதிகள் என கூறி அவர்கள் மீது தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதல் நடத்த தொடங்கியது.

மேலும் துருக்கி ராணுவத்தின் ஆதரவோடு சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களும் குர்து இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

அந்த வகையில் குர்து இன போராளிகளின் வசம் இருந்த அலெப்போ மாகாணத்தை துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கடந்த 2018-ம் ஆண்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அவர்களிடம் இருந்து அலெப்போ மாகாணத்தை மீண்டும் மீட்க குர்து இன போராளிகள் கடுமையாக போராடி வருகின்றனர். இதனால், இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் அலெப்போ மாகாணத்தின் அப்ரின் நகரில் உள்ள சந்தையில் நேற்று முன்தினம் மாலை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், முஸ்லிம் மக்கள் நோன்பு திறப்பதற்காக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது, சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட எண்ணெய் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் தீக்கிரையாகின.

இதனால் வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 6 பேரும், பெண்கள், குழந்தைகள் அப்பாவி மக்கள் 34 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலுக்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் குர்து போராளிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே சிரியாவில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சிரியா முழுவதும் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News