செய்திகள்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர்

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தை குறிவைத்து தற்கொலை தாக்குதல்-3 பேர் உயிரிழப்பு

Published On 2020-04-29 08:49 GMT   |   Update On 2020-04-29 10:09 GMT
ஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் அப்பாவி மக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் புறநகர்ப் பகுதியில் ராணுவ தளம் உள்ளது. இங்கு ஒப்பந்த பணிகளை செய்வதற்காக முகாமிற்கு வெளியே தொழிலாளர்கள் இன்று காத்திருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த பயங்கரவாதி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 3 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர். 

நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரியும், ராணுவ தளபதியும் இந்த முகாமை பார்வையிட்டு சென்ற மறுநாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலிபான் இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக அரசு குற்றம்சாட்டி உள்ளது. 

உள்துறை செய்தி தொடர்பாளர் தாரிக் அரியன் கூறுகையில், ‘இந்த தாக்குதலை தலிபான் இயக்கம் நடத்தி உள்ளது. இது மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகும். ராணுவ தளத்தை தாக்குவதற்காக பயங்கரவாதி வந்துள்ளான். தனது இலக்கை எட்ட முடியாததால், அப்பாவி மக்களை கொன்றுள்ளான்’ என்றார்.

ஆனால் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காபூல் நகரின் ஒரு சில இடங்களில் தலிபான் மற்றும் ஐஎஸ் அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ராணுவம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News