செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

Published On 2020-04-26 06:10 GMT   |   Update On 2020-04-26 06:10 GMT
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

பலி எண்ணிக்கையும் 250-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசு, ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட முடியாமல் திணறி வருகிறது.இதனால் பாகிஸ்தானின் பொருளாதார பிரச்சினையை சரி செய்ய சர்வதேச நிதியம் அந்த நாட்டுக்கு நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல் அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் நேற்று கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி சோதித்தது. அரேபிய கடல் பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் அர்ஷித் ஜவத் கூறுகையில், “போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கடலில் வைக்கப்பட்டிருந்த இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன” என கூறினார்.

மேலும், “இந்த ஏவுகணைகள் அதிநவீன தொழில் நுட்பத்துடனும், வான் பயண மின்னணுவியல் தொழில் நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மிக துல்லியமாக கடலில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தவையாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஏவுகணை சோதனை, கடற்படை தளபதி ஜாபர் மஹ்மூத் அப்பாசி மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஜாபர் மஹ்மூத் அப்பாசி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்த ஏவுகணை சோதனை பாகிஸ்தான் கடற்படையின் செயல்பாட்டு திறன் மற்றும் ராணுவ தயார் நிலைக்கு ஒரு சான்றாகும்” என தெரிவித்துள்ளார்.மேலும் “எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கு தகுந்த முறையில் பதிலளிக்க பாகிஸ்தான் கடற்படை முழு திறன் கொண்டது. பாகிஸ்தான் கடற்படை எந்தவொரு நிலையிலும் தாய்நாட்டையும், அதன் நீர் எல்லைகளையும் பாதுகாக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News