செய்திகள்
டொனால்டு டிரம்ப்

'ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள்’ - கடற்படைக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு

Published On 2020-04-22 21:19 GMT   |   Update On 2020-04-22 21:19 GMT
அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கிய ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை. 

அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையில், பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர். 

ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 



இந்நிலையில், அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கி ஏந்திய அனைத்து ஈரான் படகுகளையும் சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

இது குறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய ஈரான் நாட்டின் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.



ஈரான் கடற்படையினரின் படகுகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதால் வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ராணுவ செயல்பாட்டிற்காக செயற்கைக்கோள் ஒன்றை ஈரான் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News