செய்திகள்
பிரதமர் மோடி , மனிலா டிரம்ப், டொனால்டு டிரம்ப் (கோப்பு படம்)

இந்தியாவுக்கு நன்றி... இதை மறக்க முடியாது -டிரம்ப் டுவிட்

Published On 2020-04-08 21:14 GMT   |   Update On 2020-04-08 21:14 GMT
மருந்துப்பொருள் ஏற்றுமதிக்கு வித்த தடையை நீக்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த உதவியை மறக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவுக்கு அமெரிக்காவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட நாங்கள் ஆர்டர் செய்த சில மருந்து பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( ஏபர்ல் 5) பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அந்த சமயத்தில் வெளிநாடுகளுக்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்தது. 

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் கடந்த 7-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது, '' அமெரிக்கா ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்ப பிரதமர் மோடி அனுமதி அளிக்கவில்லை என்றால் பதிலடி கொடுக்கப்படலாம்’’ என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கூறினார்.



டிரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரத்திலேயே இந்தியாவில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் உள்பட்ட 22 வகையான மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியது.

இதனால், அமெரிக்காவுக்கு ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகள் கிடைப்பதில் இனி எந்த சிக்கலும் இல்லை. 

இந்நிலையில், மருந்துப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில்,

 ''அசாதாரண நேரங்களில் நண்பர்களுக்கு இடையே மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகள் விவகாரத்தில் முடிவெடுத்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதை மறக்க முடியாது. 

இந்த போராட்டத்தில் மிகவும் உறுதியான தலைமை பண்பு கொண்டு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் மனிதநேயத்திற்கே உதவி செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி’’ என அவர் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News