செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க மக்கள் முக கவசம் அணிய டிரம்ப் பரிந்துரை

Published On 2020-04-05 06:42 GMT   |   Update On 2020-04-05 06:42 GMT
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்து கொள்ள அமெரிக்க மக்கள் முககவசம் அணியுமாறு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் நான் முககவசம் அணிய விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

வல்லரசு நாடான அமெரிக்காவில், கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. நேற்று மதிய நிலவரப்படி அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. பலி எண்ணிக்கையும் 7 ஆயிரத்தை கடந்து விட்டது.

ஏறத்தாழ 25 கோடி மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையத்தின் பரிந்துரையை சுட்டிக்காட்டி, தனது நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் பிடியில் சிக்காமல் காத்துக்கொள்வதற்கு ஸ்கார்ப் (கைக்குட்டை போன்ற பெரிய துணி) அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை அணியுமாறு பரிந்துரைத்து உள்ளார்.



இதுகுறித்து அவர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடுதல் தன்னார்வ சுகாதார நடவடிக்கையாக, முகத்தில் ஸ்கார்ப் அல்லது வீட்டில் தயாரித்த முக கவசங்கள் அணியுமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் அறிவுரை கூறி இருக்கிறது. மருத்துவ தரத்திலான அல்லது அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்துகிற தரத்திலான முக கவசங்களை அணியுமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் சிபாரிசு செய்யவில்லை.

அவற்றை அமெரிக்கர்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் அணிவார்கள். மருத்துவ ரீதியிலான பாதுகாப்பு கவசங்கள் எல்லாம் முன்னிலையில் நின்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்குத்தான் தேவை. அவர்களுக்காகத்தான் அவை ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

நான் முககவசம் அணிய விரும்பவில்லை. நாட்டு மக்களுக்கு நான் கூறுவது ஒரு பரிந்துரை தான்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அந்த அழகான, உறுதியான மேஜைக்கு பின்னால் நான் முக கவசம் அணிந்து கொண்டு எப்படி இருக்க முடியும்?  நான் எப்படி முக கசவம் அணிந்தவாறு பல்வேறு நாடுகளின் அதிபர்கள், சர்வாதிகாரிகள், மன்னர்கள், ராணிகள் போன்றவர்களுடன் பேசுவது? எனவே முககவசத்தை எனக்கான ஒன்றாக நான் பார்க்கவில்லை.

அதே நேரத்தில் சமூக இடைவெளியை பராமரிக்கவும், வீடுகளுக்குள் முடங்கி இருக்கவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் செய்துள்ள பரிந்துரைகளுக்கு மாற்றாக நான் முக கவசம் அணிய சொல்லவில்லை.

பொதுமக்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்கிற கலாசாரத்தையும் வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News