செய்திகள்
ஈரான் சிறை கைதிகள் (கோப்பு படம்)

வெளியே பாதுகாப்பு இல்லை... தப்பிச்சென்ற சிறைக்கே மீண்டும் வந்த கைதிகள் - காரணம் என்ன?

Published On 2020-04-04 21:00 GMT   |   Update On 2020-04-04 21:00 GMT
ஈரான் நாட்டில் சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதிகள் கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் சிறைக்கே வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெஹ்ரான்:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கும் பரவியுள்ள பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

உலகம் முழுவதும் 11 லட்சத்து 92 ஆயிரத்து 621 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 64 ஆயிரத்து 228 பேர் உயிரிழந்துள்ளனர். 

மத்திய கிழக்கு நாடான ஈரானிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 55 ஆயிரத்து 743 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 3 ஆயிரத்து 452 பேர் உயிரிழந்துள்ளனர். 

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஈரான் அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத்தடைகளால் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் ஈரான் திணறிவருகிறது. 

இதனால், வைரஸ் பரவும் வேகத்தை குறைக்க பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுரை வழங்கியது. 



ஆனால், ஈரான் மக்கள் அரசு அறிவுறுத்திய ஆலோசனைகளை மீறி பொது இடங்களில் கூட்டமாக கூடி வருகின்றனர். இதனால் வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையில், ஈரான் சிறைகளில் இருந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான கைதிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிபந்தனைகளுடன் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டனர். 

ஆனால், ஈரான் சிறை அதிகாரிகளே எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் 70 கைதிகள் தப்பிச்சென்றனர். 

அந்த கைதிகளை பிடிக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், கைதிகளை அதிகாரிகளால் பிடிக்க முடியாமல் இருந்தது.



இந்நிலையில், தற்போது ஈரானில் கொரோனா வேகமாக பரவி வருவதால் சிறையை விட்டுத்தப்பி சென்ற 70 கைதிகளும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் சிறைக்கே திரும்பி வந்துள்ளனர். 

சிறைக்கு வெளியில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு நிறைந்த சிறைக்கே மீண்டும் கைதிகள் திரும்பி வந்துள்ள சம்பவம் அதிகாரிகள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News