செய்திகள்
வெண்டிலேட்டர்

வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டால் திணறும் உலக நாடுகள்...

Published On 2020-04-04 03:47 GMT   |   Update On 2020-04-04 03:47 GMT
கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த பெரும்பாலான நபர்களுக்கு வெண்டிலேட்டர்களே உயிர்காக்கும் உற்ற தோழனாக செயல்பட்டு வருகின்றன. ஆனால்,இத்தகைய இன்றியமையாத சுவாசக் கருவிக்குத்தான் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
உலகின் பெரும் பிரச்சினையாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது. இந்த கொடிய வைரசின் குதிரைப் பாய்ச்சலுக்கு கடிவாளம் போட முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. வைரஸ் பாதிப்பால் அன்றாடம் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் ஒட்டுமொத்த மனித குலமும் மிரண்டுபோய் நிற்கிறது. பாரெங்கும் பாரபட்சமின்றி பரவி 10 லட்சம் பேரை பாதித்துள்ள கொரோனா வைரஸ், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளரும் இந்த வைரசால் தட்டுப்பாடுகளும் தழைத்தோங்கி வருகின்றன.

சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருவதால், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்து, உலகளவில் அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிருமிநாசினிகள், முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு உருவாகி அவை ஓரளவுக்கு சரி செய்யப்பட்டு வரும் நிலையில், உயிர் காக்கும் வெண்டிலேட்டர்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மலில் உள்ள நீர்த்துளிகள் மூலம் மற்றொரு நபரின் உடம்புக்குள் நுழையும் கொரோனா, நுரையீரலில் குடியேறுகிறது. அங்குள்ள நுரையீரல் செல்களை அசுர வேகத்தில் அரித்து, சில நாட்களில் ரத்தத்தில் கலக்கும் ஆக்சிஜனையும் முடக்குகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த ஆறில் ஒரு நபருக்கு கடுமையான சுவாசப் பிரச்சினை உருவாகிறது.

சாதாரணமாக நிமிடத்துக்கு சுமார் 15 முறை மூச்சுவிடும் நபர், கொரோனாவின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி நிமிடத்துக்கு சுமார் 30 முறை மூச்சை வெளிவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இவ்வாறு இயல்பை விட அதிக அளவில் மூச்சுக்காற்றை வெளிவிடுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதை மட்டுப்படுத்த வெண்டிலேட்டர்கள் துணை நிற்கின்றன.

மனிதர்களுக்கு செயற்கையாக சுவாசத்தை வழங்கும் மருத்துவ உபகரணமே இந்த வெண்டிலேட்டர்கள்(செயற்கை சுவாசக் கருவி). நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்போது, இந்த கருவியில் உள்ள குழாய்களை மூச்சுக்குழாயோடு இணைத்து செயற்கையாக நுரையீரலுக்கு ஆக்சிஜன் வாயு செலுத்தப்படும். இதன்மூலம் கார்பன்-டை-ஆக்சைடும் உடலிலிருந்து பிரத்யேக குழாய் கொண்டு வெளியேற்றப்படும். இந்த கருவியின் துணைகொண்டு நோயாளியின் உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு செலுத்தப்படும் ஆக்சிஜன் மற்றும் ஈரப்பதத்தின் அளவு மாற்றி அமைக்கப்படும்.

கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த பெரும்பாலான நபர்களுக்கு வெண்டிலேட்டர்களே உயிர்காக்கும் உற்ற தோழனாக செயல்பட்டு வருகின்றன. ஆனால்,இத்தகைய இன்றியமையாத சுவாசக் கருவிக்குத்தான் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் வெண்டிலேட்டர்களின் தேவையும் அதிகமாகி தட்டுப்பாடு சூழ்ந்துள்ளது. இதனால் உலக நாடுகள் மேலும் கலக்கமடைந்து திணறி வருகின்றன.

குறிப்பாக வைரஸ் பாதிப்பால் அல்லாடி வரும் அமெரிக்காவின் நிலைமை வெண்டிலேட்டர் பற்றாக்குறையால் இன்னும் மோசமாகி உள்ளது. கொரோனா வைரசால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் சுமார் 1.5 லட்சம் வெண்டிலேட்டர் கருவிகளே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூயார்க் நகரத்துக்கு மட்டும் 30 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தேவைப்படுவதாக அதன் கவர்னர் ஆன்ட்ரூ கியூமோ சமீபத்தில் கூறியிருப்பதே இதற்கு சாட்சி. இந்த நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளார்.



அடுத்த 100 நாட்களில் 1 லட்சம் வெண்டிலேட்டர்களை உற்பத்தி செய்து நட்பு நாடுகளுக்கு வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தங்கள் நாட்டிற்கே கருவி இல்லாதபோது இவர் எவ்வாறு நட்பு நாடுகளுக்கு அதை தானம் செய்வார் என்று டிரம்பின் இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். எனினும் அமெரிக்காவில் ‘போர்டு’, ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ உள்ளிட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தங்களை வெண்டிலேட்டர்கள் தயாரிப்பில் ஈடுபடுத்தி உள்ளன. மேலும் ரஷியாவும், தன் பங்குக்கு வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி உதவி செய்துள்ளது.

அமெரிக்கா மட்டுமின்றி மற்ற உலக நாடுகளிலும் வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பேரிழப்பை சந்தித்து வரும் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் வெண்டிலேட்டர்கள் குறைந்த எண்ணிக்கையிலே உள்ளன. இதனால், இனிவரும் நாட்களில் உலகெங்கும் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

வல்லரசு நாடுகளே வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் நிலையில் வளரும் நாடான இந்தியாவிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே இவை உள்ளன. இந்தியாவில் சுமார் 40 முதல் 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களே கைவசம் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் சரியாக செயல்படும் நிலையில் உள்ள வெண்டிலேட்டர்களை தரம் பிரித்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறையலாம்.

இந்தியாவில் வைரசின் தாக்கம் இதுவரை உச்சம் பெறவில்லை. தற்போதுதான் மெல்ல தலைதூக்க தொடங்கி உள்ளது. எனினும் மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த இங்கு வைரஸ் தொற்று தீவிரமானால் செயற்கை சுவாச கருவியான வெண்டிலேட்டர்களின் தேவையும் அதிகமாகும்.

இதை கருத்தில் கொண்டு வெண்டிலேட்டர்கள் உற்பத்தியை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரண ஏற்றுமதிக்கு தற்காலிக தடையும் விதித்து உள்ளது. பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ மற்றும் சில வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் வெண்டிலேட்டர்களை உற்பத்தி செய்யுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதன்படி நொய்டாவைச் சேர்ந்த ‘ஆக்வா’ நிறுவனம் அடுத்த ஒரு மாதத்தில் 20 ஆயிரம் வெண்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. குறைந்த செலவில் எளிதில் எடுத்துச் சென்று கையாளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்ட உள்ளன. பொதுவாக வெண்டிலேட்டர்கள் ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை விற்கப்படுகின்றன. ஆனால் ஆக்வா நிறுவனம் குறைந்த எடையில் ரூ.2 லட்சத்துக்கு வெண்டிலேட்டர்களை விற்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.

வெண்டிலேட்டர்கள் தயாரிப்பு பணி துரிதப்படுத்தப்பட்டாலும் அதில் பல நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பல தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி முடங்கியுள்ளன. வெண்டிலேட்டர்கள் தயாரிப்பில் பயன்படும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆலைகளும் பெரும்பாலும் மூடப்பட்டு உள்ளன. உற்பத்தி பொருட்களுக்கான இறக்குமதியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெண்டிலேட்டர் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் சூழ்நிலைகள் இவ்வாறு மோசமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அரசின் வழிமுறைகளை பின்பற்றி நம்மையும், நமது சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வோம். இந்த ஊரடங்கு நாட்களில் வேண்டுமென்றே வெளியில் திரிந்து வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விடுவதைப்போல் நடந்து கொள்ளாமல் அனைவரும் விலகியிருப்போம், விழித்திருப்போம்!

Tags:    

Similar News