செய்திகள்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்

ரஷியா வழங்கிய மருத்துவ உபகரணங்கள் பல அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றும் - டிரம்ப்

Published On 2020-04-04 00:25 GMT   |   Update On 2020-04-04 00:54 GMT
ரஷியா அதிபர் புதின் நம் நாட்டுக்கு வழங்கியுள்ள மருத்துவ உபகரணங்கள் பலரது உயிரை காப்பாற்றும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 59 ஆயிரத்து 128 இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 

அந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 76 ஆயிரத்து 37 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதல் காரணமாக 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.

இதற்கிடையில், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தத்தளித்துவந்த அமெரிக்காவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உதவ முன் வந்தார். 



இதற்காக அதிநவீன மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு ரஷியாவில் இருந்து மிகப்பெரிய சரக்கு விமானம் அமெரிக்காவுக்கு புறப்பட்டது. 

அந்த விமானம் கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அந்த மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் பலரது உயிர்களை காப்பாற்றும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது:-



‘'அமெரிக்காவுக்கு மருத்துவ உபகரணங்களை ரஷிய அதிபர் புதின் அனுப்பியது மிகவும் நல்ல உபசரிப்பு. ரஷியா அளித்த உதவியை நான் வாங்காமல் வேண்டாம் நன்றி என கூறியிருக்கலாம் அல்லது வாங்கிக்கொண்டு நன்றி என கூறியிருக்கலாம். 

புதின் மிகப்பெரிய விமானத்தில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளார். இந்த உபகரணங்கள் அமெரிக்காவில் பலரது உயிர்களை காப்பாற்றும். ஆகையால், நான் அதை ஏற்றுக்கொண்டேன்’’ என்றார். 
Tags:    

Similar News