செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க மக்களுக்கு கொரோனாவால் மிக மிக வலி ஏற்படும்- அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

Published On 2020-04-01 11:12 GMT   |   Update On 2020-04-01 11:12 GMT
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்கள் மிக மிக வலி மிகுந்ததாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். அங்கு நேற்று ஒரேநாளில் 748 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 889 ஆக உயர்ந்தது. இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கையில் சீனாவை அமெரிக்கா முந்தி உள்ளது.

மேலும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 836 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கையில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 524 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்கள் மிக மிக வலி மிகுந்ததாக இருக்கும். இந்த கொரோனா பெரும் தொற்று நோய் பிளேக் நோய் போன்றது. எனவே இந்த கடுமையான நாட்களை ஒவ்வொரு அமெரிக்க மக்களும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இல்லையென்றால் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து அமெரிக்காவின் மூத்த சுகாதார நிபுணர்கள் கூறும்போது, கொரோனா வைரசை தடுக்க மாயஜால தடுப்பூசி எதுவும் இல்லை. அதை தடுப்பது நமது கையில்தான் உள்ளது. நாம் சமூக விலகலை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

அமெரிக்காவில் மேலும் 30 நாட்கள் சமூக விலகல் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. சமூக விலகலை கடை பிடித்தாலும் கூட அமெரிக்காவில் லட்சக்கணக்கில் மக்கள் பலியாக கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் கொரோனா வைரசை தடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து போக்குவரத்துகளுக்கும் அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.

ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரசை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி கொரோனாவின் மையப்பகுதியாக மாறி விட்டது என்றும் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டினார்.

இந்த நிலையில் பிரேசிலிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டு இருப்பதால் அங்கிருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News