செய்திகள்
கோப்பு படம்

ரஷியாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி?

Published On 2020-03-25 03:45 GMT   |   Update On 2020-03-25 03:45 GMT
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷியாவில் மட்டும் கட்டுக்குள் வந்தது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
“அட.. இதெப்படி இவர்களுக்கு மட்டும் சாத்தியமாயிற்று?”

- இப்படித்தான் உலக நாடுகளையெல்லாம் இன்றைக்கு அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது புதின் ஆளுகிற ரஷியா.

உலக நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட நாடு என முதலாவது இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது ஐக்கிய அரபு அமீரகம். இரண்டாவது இடத்தில் இருப்பது ரஷியா.

ரஷியா, இப்படி இரண்டாவது இடத்தில் இருப்பது ஆச்சரியப்பட வைப்பதற்கு அர்த்தமுள்ள காரணங்கள் பல உண்டு.

1. ரஷியாவின் மக்கள் தொகை 14 கோடியே 67 லட்சம்.

2. உலகுக்கே கொரோனா வைரசை வினியோகித்து இருக்கிற சீனாவுடன் 4,209.3 கி.மீ. பரப்பிலான நீண்ட எல்லையை கொண்டுள்ளது. உலகிலேயே 6-வது நீள எல்லை இதுதான்.

3. அதுமட்டுமல்ல கொரோனா ஆதிக்கம் செலுத்தி வந்த சீனா, நார்வே உள்ளிட்ட 14 நாடுகளுடன் ரஷியாவின் எல்லை பரந்து விரிந்திருக்கிறது.

4. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நேரம்தான். ஆனால் ரஷியாவில் 9 நேர மண்டலங்கள் உள்ளன. அதாவது, 9 இடங்களில் வெவ்வேறு நேரம் காட்டும்.

இப்படி காரணங்கள் நீளுகின்றன.

ஆனாலும் ரஷியாவில் கொரோனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷியாவில் கடைசியாக கிடைத்த தகவல்கள் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றிருப்பதாக சொல்கின்றன. அதில் 253 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 லட்சத்து 28 ஆயிரம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட லக்சம்பெர்க் நாட்டில் கூட சனிக்கிழமை வரை 670 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க தகவல்.

தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை காவு வாங்கிக்கொண்டிருக்கிற இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிற மக்கள் தொகையை கொண்டுள்ள ரஷியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கிறது.

எப்படி இங்கே மட்டும் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதா?

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே, அதுவும் வெறும் 15 நாடுகளில் மட்டுமே கொரோனா வைரஸ் பரவி இருந்த நிலையில் ரஷிய பிரதமர் மிக்கேல் மிசுஸ்டின், ஜனவரி 30-ந்தேதி சீனாவுடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டார். அன்றைய தினமே அது மூடப்பட்டு விட்டது. இது மிக முக்கிய காரணம்.

தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை ரஷியா அப்போதே உருவாக்கியது.

ரஷிய மக்கள் எத்தனையோ தலைமுறை பழமையானவர்கள். போர்கள், பஞ்சங்கள், அரசியல் நிலைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டிருக்கின்றனர்.

ரஷியாவில் எல்லாவிதமான வெளிநிகழ்ச்சிகளுக்கு ஆரம்பத்திலேயே தடை விதித்து விட்டார்கள். பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதித்தனர். பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன.

சோவியத் ரஷியாவை உருவாக்கிய விளாடிமிர் லெனின் நினைவிடம் அமைந்துள்ள மாஸ்கோ செஞ்சதுக்கம்தான் அந்த நாட்டிலேயே சுற்றுலாப்பயணிகளை பெருவாரியாக வாரிக்கொள்கிற இடம். அங்கு மக்கள் செல்வதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக சமூக அளவில் கொரோனா வைரஸ் பரவுவது அங்கு பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ரஷியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கென்று ஒரே ஒரு ஆய்வுக்கூடம் தான் இருக்கிறதாம்.

ரஷியாவில் அரசியலமைப்பு சாசனம் திருத்தங்கள் தொடர்பாக ஏப்ரல் 22-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பொது வாக்கெடுப்பு தள்ளிப்போடப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் புதின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுபற்றி கூறுகையில், “நாட்டு மக்களின் உடல் நலம்தான் இப்போதைக்கு முக்கியம்” என்று குறிப்பிட்டார்.

மார்ச் 18-ந்தேதி நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றிய அதிபர் புதின், “பொதுவாகவே நாங்கள் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். அதற்காக நன்றி கடவுளே. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

ரஷியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வந்துள்ள டேவிட் பெரோவ், “எனக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதை உறுதி செய்ய 3 முறை பரிசோதனை நடத்தினார்கள். எனது 3-வது பரிசோதனையில்தான் இது உறுதி செய்யப்பட்டது. அதுவும் என் ரத்தத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை. உமிழ்நீரில்தான் இருந்தது” என்று இன்ஸ்டாகிராமில் மார்ச் 5-ல் பதிவிட்டிருக்கிறார்.

ரஷியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ரஷிய பிரதிநிதி டாக்டர் மெலிடா உஜ்னோவிக் கூறுகையில், “கொரோனா வைரசுக்கு எதிரான கட்டுப்பாடுகள் ஜனவரி மாதமே ரஷியாவில் தொடங்கி விட்டன. சோதனைகளை தாண்டி பரந்த அளவில் பலவிதமான நடவடிக்கைகளையும் ரஷியா மேற்கொண்டது. உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகள்படி இந்த நடவடிக்கைகள் எல்லாம் முன்கூட்டியே எடுக்கப்பட்டு விட்டன” என்கிறார்.

ரஷியாவில் மே 1-ந்தேதி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை நீடிக்கிறது என்பது வெளிநாட்டில் இருந்து கூட இந்த நாட்டினருக்கு கொரோனா வைரஸ் வந்து தாக்குவதற்கான வாய்ப்பை தொடர்ந்து குறைக்கிறது என்பதற்கான தகவலாக அமைந்திருக்கிறது.

உற்ற தோழனான ரஷியாவின் பாதையில், இந்தியாவும் கொரோனா வைரஸ் என்னும் எதிரியை கட்டுக்குள் கொண்டு வந்து விடும் என்பது நாட்டு மக்களின் நம்பிக்கை.
Tags:    

Similar News