செய்திகள்
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்

கொரோனா அச்சத்தால் தன்னைத்தானே தனிமைப்படுத்திய ஜெர்மனி அதிபர்

Published On 2020-03-23 04:13 GMT   |   Update On 2020-03-23 09:35 GMT
கொரோனா அச்சம் காரணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பெர்லின்:

கொரோனா வைரசால் ஜெர்மனியில் மொத்தம் 18610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. உணவை பார்சலாக வாங்கி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. 

இந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், கொரோனா அச்சம் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டது. அந்த தடுப்பூசியை ஏஞ்சலா மெர்கலுக்கு செலுத்திய டாக்டர் கோரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஏஞ்சலா மெர்கல் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும், வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை கவனிப்பார் என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் துணை அதிபரும் நிதி மந்திரியுமான ஸ்கால்ஸ் கடந்த வாரம் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மறுநாள் டுவிட்டரில் பதிவிட்ட அவர், பரிசோதனையில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்திருப்பதாக கூறினார்.
Tags:    

Similar News