செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

கொரோனா வைரஸ் பரவி, கட்டுப்பாடில்லாமல் போனதற்கு சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

Published On 2020-03-22 01:16 GMT   |   Update On 2020-03-22 01:16 GMT
கொரோனா வைரஸ் உருவாகி, கட்டுப்பாடற்று போனதற்கு சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார்.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் உருவாகி, பரவி வருவதற்கு சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாமல்போனதால், அதற்கான விலையை இப்போது உலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று சாடினார்.

ஆனால் அதற்கு பதிலடி கொடுத்த சீனா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தை அமெரிக்க தரப்பில் சிலர் களங்கப்படுத்த முயற்சிப்பதாக கூறியது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மீண்டும் சீனா மீது குற்றம்சாட்டும் வகையில் கருத்து வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் வந்தது. அது கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. இதில் சிலர் வருத்தப்படுகிறார்கள். அதை நான் அறிந்திருக்கிறேன்.

நான் ஜின்பிங்கை அறிந்திருக்கிறேன். அவர் சீனாவை நேசிக்கிறார். அவர் அமெரிக்கா மீது மதிப்பு வைத்திருக்கிறார். நானும் சீனா மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். நான் அதிபர் ஜின்பிங் மீதும் மதிப்பு வைத்துள்ளேன்.

அவர் எனது நண்பர். சீனாவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் பேசினார். அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா தகவல்களை பகிர்ந்து கொள்வதை தாமதப்படுத்தியது. இந்த தகவல்கள் உடனே தெரிந்திருக்க வேண்டியதாகும். அதை தெரிந்து கொள்வதற்கு உலகத்துக்கு உரிமை உள்ளது. உலகத்துக்கு இந்த ஆபத்து இருப்பது முதலில் சீனாவுக்கு தெரியும். மேலும் நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தரவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய சிறப்பு கடமை அவர்களுக்கு உண்டு.

இதில் சீனாவுக்கு முதலில் உதவ விரும்பிய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறபோது, தாமதம் ஆகிற ஒவ்வொரு தருணமும் உலகம் முழுவதற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இப்போதும் கூட, சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு கிடைக்கிற ஒவ்வொரு தகவலையும் உலகத்துக்கு கிடைக்கச்செய்ய வேண்டும். மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.

இது, நிகழ்கால தகவல்களை பகிர்ந்து கொள்வது பற்றியது ஆகும். இது அரசியல் விளையாட்டு அல்ல. பழிவாங்கலும் அல்ல.

டுவிட்டர் மற்றும் உலக அளவில் இருந்து தவறான தகவல்களை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் அரசிடமிருந்து சிலவும், தனிநபர்களிடம் இருந்து பலவும் வந்தன. சீனா, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள்தான் தவறான தகவல் பரப்புவதில் ஈடுபட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News