செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு கவுரவம் - முக்கிய பதவிக்கு மீண்டும் தேர்வு செய்தார், டிரம்ப்

Published On 2020-03-19 18:55 GMT   |   Update On 2020-03-19 18:55 GMT
அமெரிக்காவின் தனி உரிமை மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் பதவிக்கு ஆதித்ய பம்சாயை மீண்டும் அந்தப் பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் சட்ட கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறவர், ஆதித்ய பம்சாய். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

இவரை அமெரிக்காவின் தனி உரிமை மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் பதவியில் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்து, நியமித்தார். இந்த பதவிக்காலம் ஜனவரி மாதத்துடன் முடிந்து விட்டது.



இந்த நிலையில் ஆதித்ய பம்சாயை மீண்டும் அந்தப் பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இந்த பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அதாவது 2026-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29-ந் தேதிவரை ஆதித்ய பம்சாய் அந்தப் பதவியை வகிக்க முடியும்.

2007-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அமலாக்க பரிந்துரை அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான், தனி உரிமை மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியம் ஆகும். பயங்கரவாதத்தை தடுப்பதற்கான அமெரிக்க அரசின் முயற்சிகளையும், தனி உரிமை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் தேவையுடன், அவை சம நிலையில் இருப்பதை உறுதி செய்வதும்தான் இந்த வாரியத்தின் நோக்கம் ஆகும்.

இந்த வாரியத்தின் உறுப்பினர் பதவியில் ஆதித்ய பம்சாய் நியமிக்கப்பட்டிருப்பது கவுரவம் ஆகும்.

இவர் அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்தின் சட்ட கல்லூரியிலும் படித்து பட்டங்கள் பெற்றவர் ஆவார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஆன்டனின் ஸ்கேலியாவின் கிளார்க்காகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்ய பம்சாய் தேர்வுக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
Tags:    

Similar News