செய்திகள்
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன்

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஜோ பிடன் தொடர்ந்து வெற்றி

Published On 2020-03-18 18:46 GMT   |   Update On 2020-03-18 18:46 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஜோ பிடன் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டி உறுதியானது.
வா‌ஷிங்டன்:

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் பதவி காலம் முடிய உள்ளது. அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு நவம்பர் 3-ந் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அமெரிக்க மாகாணங்களில் நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், செனட் சபை எம்.பி. பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.



மாகாணங்களில் நடைபெறுகிற கட்சி தேர்தல்களில் 77 வயதான ஜோ பிடன் கைதான் ஓங்கி வருகிறது. அவர் தொடர்ந்து வெற்றியைப் பெற்று வருகிறார். புளோரிடா, இல்லினாய்ஸ், அரிசோனா ஆகிய 3 மாகாணங்களில் நேற்று முன்தினம் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் 3 மாகாணங்களிலும் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். 78 வயதான பெர்னி சாண்டர்சை அவர் பின்னுக்கு தள்ளி உள்ளார்.

இதையொட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜோ பிடன், டெலவாரேயில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பேசுகையில், பெர்னி சாண்டர்ஸ் ஆதரவாளர்கள் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியே முடிந்து விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வு பெறுவதற்கு மொத்தம் உள்ள 3,979 பிரதிநிதி வாக்குகளில் 1,991 வாக்குகளை பெற வேண்டும்.
இந்த 3 மாகாண தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஜோ பிடன் 1,147 பிரதிநிதிகள் வாக்குகளை பெற்றுள்ளார். பெர்னி சாண்டர்சுக்கு 861 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஜூலை மாதம் விஸ்கான்சினில் நடைபெறுகிற ஜனநாயக கட்சி மாநாட்டில், அந்த கட்சியின் ஜனாதிபதி பதவி வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

குடியரசு கட்சி வேட்பாளர் தகுதி பெறுவதற்கு மொத்தம் உள்ள 2,550 பிரதிநிதி வாக்குகளில் 1,276 வாக்குகளை பெற வேண்டும். ஆனால் டிரம்பை பொறுத்தமட்டில் 1,330 பிரதிநிதிகள் வாக்குகளை கைப்பற்றி விட்டார்.இதையொட்டி கருத்து தெரிவித்த டிரம்ப் பிரசார மேலாளர் பிராட் பார்ஸ்கேல், ‘‘குடியரசு கட்சி மேலும் ஒன்றுபட்டுள்ளது. இதற்கு டிரம்பின் தலைமைத்துவம்தான் காரணம். முன் எப்போதும் இந்த அளவுக்கு ஆதரவு இருந்தது இல்லை’’ என்று குறிப்பிட்டார்.குடியரசு கட்சி மாநாடு, ஆகஸ்டு மாதம் நடைபெறும். அந்த மாநாட்டில்தான் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
Tags:    

Similar News