செய்திகள்
மனைவியுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-03-13 03:18 GMT   |   Update On 2020-03-13 03:18 GMT
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
ஒட்டாவா:

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு, உலகம் முழுவதும் 4 ,600க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். 

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பிரதமரின் தகவல் தொடர்பு இயக்குனர் கேமரான் அகமது தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ பரிந்துரைகளைத் தொடர்ந்து, சோபி கிகோரிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார். அவருக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. நன்றாக இருப்பதாகவே உணர்கிறாள். லேசான அறிகுறிகள் தென்படுவதால், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.

அதேசமயம் பிரதமர் ட்ரூடோவுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். எனினும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின்பேரிலும், அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார். தற்போது அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாததால், இப்போது அவருக்கு எந்த பரிசோதனையும் செய்யப்பட மாட்டாது. எனவே, சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News