செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பு மருந்து... இஸ்ரேல் விஞ்ஞானிகளின் ஆய்வில் முன்னேற்றம்

Published On 2020-03-12 10:42 GMT   |   Update On 2020-03-12 10:42 GMT
இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாகவும், இது தொடர்பாக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெருசலேம்:

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை  4 ,627 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் முதலில் கால் பதித்த சீனாவில் தற்போது வைரஸ் பரவுவது குறைந்துள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. 

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல், உடல்வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர். 

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் விஞ்ஞானிகள் உருவாக்கிய மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளது. இதில் சில நிறுவனங்களின் ஆய்வு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அவ்வகையில் இஸ்ரேல் நாட்டின் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் சில தினங்களில் தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என விஞ்ஞானிகள் கூறியதாக இஸ்ரேல் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இது அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.
Tags:    

Similar News