செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு

Published On 2020-03-09 18:25 GMT   |   Update On 2020-03-09 18:25 GMT
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.
தெஹ்ரான்:

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 90க்கும் கூடுதலான நாடுகளுக்கு பரவியுள்ளது.  இதனால் உலகளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்து இத்தாலி, தென்கொரியா  மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  ஈரானின் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.  தெஹ்ரானில் 1,945 பேரும், குவாம் நகரில் 712 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரானில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 21 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், நேற்று ஒரே நாளில் 49 பேர் வைரஸ் பாதிப்பிற்கு பலியானது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது. வைரஸ் பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது என ஈரான் நாட்டு அரசு சார்பில் கூறப்படுகிறது.  எனினும், வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் இன்று 43 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 237 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதால் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பரவக்கூடாது என்பதற்காக 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வேகமாக பரவும் சூழலில், சிறைச்சாலைக்கும் பரவினால் உயிரிழப்பு அதிகமாகும் என்ற எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி தெரிவித்தார். மேலும் கைதிகளை விடுவிப்பதால் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தொடர்ந்து கவனிக்கும்  என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News