செய்திகள்
நேதன்யாகு

மூன்றாவது முறை நடந்த தேர்தலிலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை- நேதன்யாகு அதிர்ச்சி

Published On 2020-03-05 10:24 GMT   |   Update On 2020-03-05 10:24 GMT
இஸ்ரேல் நாட்டில் மூன்றாவது முறையாக நடந்த தேர்தலிலும் பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் நேதன்யாகு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
டெல் அவிவ்:

இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் செப்டம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஈடுபட்டார். அதில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே, கடந்த 2-ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் ஆளும் லிக்குட் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பென்னி காண்ட்ஸின் புளூ அண்ட் ஒயிட் கட்சிக்கும் வழக்கம்போல் நேரடி போட்டி இருந்தது. இந்த முறையும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், நேதன்யாகு கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மெஜாரிட்டி பெறுவார் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.

அதனை உறுதி செய்யும் வகையில், வாக்கு எண்ணிக்கையின்போது நேதன்யாகுவின் லிக்குட் கட்சி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. 90 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் ஆளும் லிக்குட் கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. எதிர்க்கட்சியான புளூ அண்ட் ஒயிட் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்திருந்தன.

இந்நிலையில் 99 சதவீத வாக்குகள் இன்று எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், லிக்குட் கட்சி 36 இடங்களை உறுதி செய்துள்ளது. கூட்டணி கட்சிகள் 22 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. எனவே, லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு மொத்தம் 58 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சியமைக்க இன்னும் 3 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, எதிர் கூட்டணியில் உள்ள அதிருப்தி உறுப்பினர்களை இழுக்க லிக்குட் கட்சி காய்நகர்த்தி வருகிறது.

இந்த முறையும் மெஜாரிட்டி கிடைக்காததால் நேதன்யாகு அதிர்ச்சி அடைந்துள்ளார். நாடு இதைத்தான் முடிவு செய்துள்ளது என கூறி உள்ள அவர், இஸ்ரேல் வரலாற்றில் பிரதமருக்கான போட்டியில் வேறு எந்த வேட்பாளரை விடவும் மக்கள் எனக்கு அதிக வாக்குகளை வழங்கி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் பிரதமர் பதவியில் நீண்ட காலம் இருந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ள நேதன்யாகு, ஐந்தாவது முறையாக பிரதமர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News