செய்திகள்
பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் அகதிகள்

துருக்கி, கிரீஸ் எல்லையில் அகதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல்

Published On 2020-03-03 08:05 GMT   |   Update On 2020-03-03 08:05 GMT
சிரிய போரால் துருக்கியில் இருந்து கிரீஸ் எல்லை வழியாக ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் முயற்சி செய்துவருவதால் இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஏதேன்ஸ்:

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. 

கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்துவருகிறது. 

இதற்கிடையில், இட்லிப் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை ரஷியா- சிரிய படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 33 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு துருக்கி நடத்திய பதிலடி தாக்குதலில் 30-க்கும் அதிகமான சிரிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால் சிரியாவின் ஆதரவு நாடான ரஷியாவுக்கும்-துருக்கிக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த போர் பதற்றத்தால் சிரியாவின் இட்லிப் பகுதியில் வசித்துவந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியே அகதிகளாக துருக்கி நாட்டிற்குள் நுழைய தொடங்கியுள்ளனர்.

துருக்கியில் ஏற்கனவே சுமார் 35 லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். தற்போது நிலவிவரும் போர் பதற்றத்தால் சிரியாவில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக ரஷிய வான்வெளி தாக்குதலில் தங்கள் வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அவசரமாக ஆலோசனை நடத்த துருக்கி நேட்டோவிடம் வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து நடைபெற்ற நேட்டோ ஆலோசனை கூட்டத்தில் உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு இரங்கல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட எந்தவித ஆர்வமும் காட்டவில்லை.

நேட்டோவின் செயலால் ஆத்திரமடைந்த துருக்கி தங்கள் நாட்டில் அகதிகளாக உள்ள மக்களை ஐரோப்பிய நாட்டிற்குள் அனுப்ப முடிவு செய்துள்ளது. 



இதற்காக துருக்கியையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இடமாக உள்ள துருக்கி-கிரீஸ் எல்லையை திறந்து வைத்துள்ளது. இதனால் சிரிய அகதிகள் மட்டுமல்லாமல் துருக்கியை சேர்ந்த ஆயிரக்காணக்கானவர்களும் கிரீஸ் எல்லை நோக்கி பயணம் செய்துவருகின்றனர். 

ஐரோப்பாவுக்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு எல்லையை முற்றுகையிட்டுள்ள அகதிகளை கிரீஸ் அதிகாரிகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். கடல் வழியாகவும் கிரீஸ் எல்லைக்குள் அகதிகள் சட்டவிரோதமாக செல்ல முயற்சி செய்து வருகின்றனர்.  ஆனாலும், சில அகதிகள் அத்துமீறி வேலிகளை தாண்டி சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லைக்குள் நுழைந்துவருகின்றனர். 

இந்நிலையில் துருக்கி-கிரீஸ் எல்லையில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பாவுக்குள் இன்று மீண்டும் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்தனர். இந்த ஊடுருவலை பாதுகாப்பு படையினர் தடுக்க முற்பட்டனர்.

இதனால் அகதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. இந்த மோதலின் போது பாதுகாப்பு படையினர் மீது அகதிகள் கற்களையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 



இந்த தாக்குதலுக்கு கிரீஸ் பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். கடல் வழியாகவும் ஐரோப்பாவுக்குள் அகதிகள் நுழைய முயற்சி செய்துவருவதால் கிரீஸ் கடல் எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சி செய்யும் அகதிகளுக்கும், பாதுகாப்பு படையிருக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருவதால் துருக்கி-கிரீஸ் எல்லையில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.
Tags:    

Similar News