செய்திகள்
மசூமே எப்டேகர்

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Published On 2020-02-29 02:45 GMT   |   Update On 2020-02-29 02:45 GMT
ஈரான் நாட்டின் துணை அதிபர்களில் ஒருவரான மசூமே எப்டேகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டெஹ்ரான் :

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், அங்கு தனது வீரியத்தை குறைத்து கொண்டிருக்கும் அதே வேளையில் பிற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

சீனாவை தவிர்த்து சுமார் 40 நாடுகளுக்கு கொரோனா பரவி உள்ளது. உலகம் முழுவதிலும் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான் மற்றும் தென்கொரியா ஆகிய 2 நாடுகளும்தான் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. அதிலும் குறிப்பாக சீனாவுக்கு அடுத்து, கொரோனாவால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட நாடாக ஈரான் உள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 388 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 200 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே அந்த நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.அந்த நாட்டு சுகாதாரத்துறை துணை மந்திரியும், கொரோனா வைரசுக்கு எதிரான திட்ட அமைப்பின் தலைவருமான இராஜ் ஹரீா்சியை கொரோனா தாக்கியது.

அவரை தொடர்ந்து வாடிகன் மற்றும் எகிப்துக்கான முன்னாள் தூதர் ஹாதி கோஸ்ரோஷாஹி மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட முக்கிய பிரமுகர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அந்த நாட்டின் துணை அதிபர்களில் ஒருவரான மசூமே எப்டேகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு மந்திரி பதவியேற்ற முதல் முஸ்லிம் பெண்ணான எப்டேகர் தற்போது பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறையை கவனித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக எப்டேகருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதால், அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாடிகன் மற்றும் எகிப்துக்கான முன்னாள் தூதர் ஹாதி கோஸ்ரோஷாஹி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதையடுத்து, வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் வெள்ளிக்கிழமை தொழுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஈரானுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள் தங்களது எல்லைகளை மூடிவிட்டன. மேலும் விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News