செய்திகள்
ரஷிய அதிபர் புதின் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன்

ஆழ்ந்த அனுதாபங்கள்... ஆனால் கூடுதல் படைகளை அனுப்ப முடியாது... துருக்கிக்கு கைவிரித்த நேட்டோ

Published On 2020-02-29 00:58 GMT   |   Update On 2020-02-29 00:58 GMT
இட்லிப்பில் உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் ஆனால் கூடுதல் படைகளை அனுப்பமுடியாது என நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.
அங்காரா:

சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர். 

அங்கு மிகவும் முக்கிய இடமாக இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது.

இட்லிப் மாகாணத்தின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரியாவின் எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளையும் குவித்து வைத்துள்ளது. 

உள்நாட்டில் தொடங்கிய இப்போர் தற்போது இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் உள்ள துருக்கி-சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

துருக்கியின் இந்த நடவடிக்கை ரஷியாவை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் ரஷியா-துருக்கி இடையே மோதல் நிலவிவருகிறது.



இதற்கிடையில், போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் பாரா மற்றும் பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷிய கூட்டுப்படைகள் நேற்று அதிரடியாக வான்வெளி தாக்குதல்கள் நடத்தியது. 

இந்த தாக்குதல்களில் துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் அப்பகுதியில் போர் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, அமெரிக்கா உள்பட 29 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ குழுவில் உறுப்பினராக உள்ள துருக்கி இந்த விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த வேண்டும் என அந்த அமைப்பிற்கு விடுத்தது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கிக்கு கூடுதலாக நேட்டோ படைகள், ஆயுதங்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

துருக்கியின் வேண்டுகோளை ஏற்று நேட்டோ உறுப்பினர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று பெல்ஜியத்தில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. 



மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில் துருக்கிக்கு கூடுதல் படைகளை அனுப்பும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக ரஷியா-சிரியா தாக்குதலில் உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து நேட்டோ பொதுச்செயளாலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூறுகையில்,

''இட்லிப் பகுதியில் உயிரிழந்த துருக்கி வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். ரஷியா மற்றும் அசாத் தலைமையிலான சிரிய படைகள் இட்லிப் பகுதியில் நடத்தும் வான்வெளி தாக்குதல்களை நிறுத்திவிட்டு சிரியாவில் அமைதியை நிலைநாட்ட தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். 

ஏனென்றால் பொதுமக்கள் மீது வான்வெளி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. அவர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி மிகப்பெரிய இன்னல்களுக்கு உள்ளாகுகின்றனர்.

துருக்கியின் வான்பரப்பை பாதுகாக்க தேவையான உதவிகள் செய்யப்படும்.  இட்லிப் நிலைமையை நேட்டோ மிகவும் உன்னிப்பாக கவனித்துவருகிறது’’ என்றார்.
Tags:    

Similar News