செய்திகள்
மிச்சேல் பேச்லட்

போலீஸ் செயலற்றுவிட்டது - டெல்லி கலவரத்துக்கு ஐநா சபை கண்டனம்

Published On 2020-02-28 05:20 GMT   |   Update On 2020-02-28 05:29 GMT
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி கலவரத்தில் போலீஸ் செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஹை கமி‌ஷனர் கூறியுள்ளார்.
ஜெனீவா:

ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பின் 43-வது ஆலோசனை கூட்டம் சுவீட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஹை கமி‌ஷனர் மிச்சேல் பேச்லட் பேசும்போது, டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தார்.

இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி கலவரத்தில் போலீஸ் செயல்படாமல் இருந்தது போன்றவை மிகவும் கவலை அளிக்கிறது.

இந்தியாவில் அனைத்து சமூதாயத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் அமைதியான முறையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

அவர்கள் இந்தியாவின் நீண்டகால மதசார்பற்ற பாரம்பரியத்தை ஆதரித்து வருகிறார்கள். டெல்லி கலவரத்தின்போது, முஸ்லிம்களுக்கு எதிராக சில பிரிவினர் தாக்குதல் நடத்தியபோது, போலீசார் பாராமுகமாக செயலற்று நின்றிருக்கிறார்கள்.

மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் ஏவி விடப்பட்டுள்ளனர்.



காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்ட போதிலும் இன்னும் 800 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இயல்புநிலை திரும்பவில்லை.

பள்ளிகள், வியாபார நிறுவனங்கள், மக்களின் வாழ்க்கை அனைத்துக்கும் அதிக அளவில் ராணுவங்களை குவித்திருப்பதன் மூலம் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதிக படை குவித்திருப்பதை குறைக்கவோ, பாதுகாப்பு படையினரால் மனித உரிமை மீறல் நடப்பதை தடுக்கவோ உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இணையதளம், மொபைல் சேவைகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாமல் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News