செய்திகள்
கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவருக்கு சோதனை செய்யும் மருத்துவர்கள்

கொரோனா வைரஸ் தாக்குதல் - சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு

Published On 2020-02-26 09:41 GMT   |   Update On 2020-02-26 11:13 GMT
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2715 ஆக உயர்ந்துள்ளது.
பீஜிங்:

சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 31 மாகாணங் களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே சென்றது. சில நாட்களுக்கு முன்பு பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ தாண்டியது. நேற்று 52 பேர் கொரோனா வைரசுக்கு இறந்தனர்.

இதனால் சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 715 ஆக உயர்ந்தது. நேற்று புதிதாக 406 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 64 ஆக உயர்ந்தது.

இதில் கடுமையாக பாதிப்படைந்துள்ள ஹூபெய் மாகாணத்தில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனா தவிர மற்ற நாடுகளுக்கு பரவி உள்ளது. இதில் தென்கொரியா, ஈரான், இத்தாலியில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் கொரோனாவுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். அங்கு இதுவரை 11 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

மேற்காசிய நாடான ஈரானில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் வைரசுக்கு 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு வெளியே கொரோனாவுக்கு அதிகம் பேர் பலியாகி உள்ள நாடாக ஈரான் உள்ளது. மேலும் அங்கு 95 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள வடக்கு பிராந்தியத்தில் பரவிய கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் தெற்கு பகுதியில் கொரோனா பரவத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, தைவான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அமெரிக்கா உள்பட 37 நாடுகளில் பரவி உள்ளது. இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News