செய்திகள்
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள்

கட்டுக்குள் வருகிறதா கொரோனா? சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Published On 2020-02-26 08:32 GMT   |   Update On 2020-02-26 08:32 GMT
சீனாவில் 2,700-க்கும் மேற்பட்ட உயிர்களை குடித்த கொரோனா வைரசின் தாக்கம் தணிய தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீஜிங்:

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 25 உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான், தென் கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பல உயிர்களை பலி கொண்ட கொரோனா சீனாவில் கோர தாண்டவம் ஆடியது. கடந்த ஒரு மாதமாக சீனாவில் தினம் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தனர்.

சீனாவில் இதுவரை 2,715 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 52 பேர் பலியாகினர் மற்றும் 439 பேர் கொரானா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 78 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களின் எண்ணிக்கை 374 குறைந்து 8,752 ஆக உள்ளது.



சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 29,745 பேர் வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் கடந்த நாட்களை விட குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதன் முதலில் வைரஸ் பரவிய ஹுபெய் மாகாணத்திலும் நோய்த்தொற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகையே அச்சுறுத்திய கொரோனாவால் உலக பொருளாதாரமும் முக்கியமாக சீன பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. உயிர்க்கொல்லி வைரசான கொரோனா கட்டுக்குள் வரவேண்டும் என்பதே உலக நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் எண்ணமாகும். 
Tags:    

Similar News