செய்திகள்
கொரோனா அச்சத்தால் முகமூடி அணிந்து செல்லும் இளம் பெண்கள்

ஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன்... அதிரவைக்கும் கொரோனா...

Published On 2020-02-24 22:10 GMT   |   Update On 2020-02-24 22:10 GMT
ஈரானை தொடர்ந்து ஈராக், குவைத், பஹ்ரைன், ஓமன் என மத்திய கிழக்கு நாடுகளும் கொரோனா வைரஸ் பரவிவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பாக்தாத்:

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும் 77 ஆயிரத்து 150 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றான ஈரானில் உள்ள குவாம் நகரில் கொரோனா பரவியத்தொடங்கியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், 61 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஈரானை தொடர்ந்து அண்டை நாடுகளான ஈராக், ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 



ஈரான் நாட்டில் இருந்து சொந்த நாட்டான ஓமன் நாட்டிற்கு திரும்பிய 2 பெண்களுக்கு கொரோனா பரவி இருப்பதை அந்நாட்டு அரசு உறுதி படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஈராக் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நஜப் நகரில் ஒரு நபருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதிய மருத்துவ வசதிகள் இன்மை, டாக்டர்கள் தட்டுப்பாடு என மருத்துவதுறையில் பின்தங்கியுள்ள ஈராக்கில் கொரோனா பரவியுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.   

மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், ஓமன், இஸ்ரேல், லெபனான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
Tags:    

Similar News