செய்திகள்
பெர்னீ சாண்டர்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ர‌ஷியா மீண்டும் முயற்சி? - புதினுக்கு எதிர்க்கட்சி வேட்பாளர் கண்டனம்

Published On 2020-02-23 01:14 GMT   |   Update On 2020-02-23 01:14 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ர‌ஷியா மீண்டும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து ர‌ஷிய அதிபர் புதினுக்கு எதிர்க்கட்சி வேட்பாளர் பெர்னீ சாண்டர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வா‌ஷிங்டன்:

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், ர‌ஷியா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையில், அமெரிக்காவில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க தேர்தலில் ர‌ஷியா தலையிட்டதற்கு ஆதாரங்கள் இல்லை என ராபர்ட் முல்லர் விசாரணைக்குழு 448 பக்க அறிக்கை அளித்தது. அதே நேரத்தில் விசாரணையை டிரம்ப் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் பதவிக்காலம் முடிவதால், அங்கு வரும் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் செனட் சபை எம்.பி., பெர்னீ சாண்டர்ஸ் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க தேர்தலில் ர‌ஷியா மீண்டும் தலையிட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவதற்காக ர‌ஷியா இணையதளம் மூலம் ஊடுருவி வருவதாக உளவுத்துறை எச்சரித்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற உளவு குழுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் ‘தி வா‌ஷிங்டன் போஸ்ட்’ நாளேடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுவதில் முன்னிலையில் உள்ள பெர்னீ சாண்ட்ர்ஸ் பிரசாரத்தில் ர‌ஷியா உதவுவதற்கு முயற்சிகள் செய்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடமும், பிற அமெரிக்க எம்.பி.க்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது.

இருப்பினும் அமெரிக்க தேர்தலில் ர‌ஷியா தலையிடும் முயற்சிக்க பெர்னீ சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



அவர் கலிபோர்னியா மாகாணம், பேக்கர்ஸ்பீல்டு நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது பிரசாரத்துக்கு உதவுவதற்கு ர‌ஷியா முயற்சிகள் செய்கிறது என கடந்த மாதம் அமெரிக்க அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ர‌ஷியா எவ்வாறு தலையிட முயற்சி செய்தது என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. இப்படிப்பட்ட எந்தவொரு முயற்சியையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். எங்கள் தேர்தலில் தலையிடக்கூடாது.

ர‌ஷிய அதிபர் புதின் ஒரு எதேச்சதிகார குண்டர் ஆவார். அவரது அரசு, நமது நாட்டில் பிரிவினை உண்டாக்க இணைய பிரசாரத்தை பயன்படுத்தி உள்ளது.

தெளிவாக சொல்கிறேன். நம்மில் பிரிவினை ஏற்படுத்துவதின் மூலம் அமெரிக்க ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிட விரும்புகிறார்கள் என்றால், தற்போதைய ஜனாதிபதி டிரம்பை போல இல்லாமல், அவர்களின் முயற்சிகளுக்கு எதிராக நான் நிற்பேன். அது மட்டுமின்றி எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் எதிராக நான் உறுதியாக நிற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News