செய்திகள்
கொரோனா வைரஸ்

சீன சிறைகளில் வேகமாக பரவும் கொரோனா- அரசுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி

Published On 2020-02-21 23:33 GMT   |   Update On 2020-02-21 23:33 GMT
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது அங்குள்ள சிறைகளில் அதின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்த வழி தெரியாமல் தவிக்கும் அரசுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக, அங்குள்ள சிறைகளில் தற்போது இந்த வைரஸ் வேகமாக பரவி வருவது கண்டறியப்பட்டு உள்ளது. அந்தவகையில் கொரோனா வைரசின் பிறப்பிடமான ஹுபெய் மாகாண சிறைகளில் 271 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஷான்டாங் மாகாணத்தின் ரெஞ்செங் சிறையில் 7 போலீசார் மற்றும் 200 கைதிகள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதைப்போல ஜெஜியாங் மாகாணத்தின் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஹுபெய் மாகாண சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள இளங்குற்றவாளி ஒருவருக்கும் வைரஸ் அறிகுறி காணப்படுகிறது.

இவ்வாறு வைரஸ் பாதிப்புக்கு உள்ளான கைதிகள் மற்றும் போலீசார் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு உள்ளனர். நோய் அறிகுறி காணப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறைகளில் கொரோனா வேகமாக பரவுவதை தொடர்ந்து வைரஸ் பாதிப்பில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உகான் மகளிர் சிறை வார்டன், ஷாங்டாங் மாகாண நீதித்துறை தலைவர் ஜி வெய்ஜன், ஷிலிபெங் சிறை இயக்குனர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News