செய்திகள்
துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்.

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி

Published On 2020-02-20 08:17 GMT   |   Update On 2020-02-20 08:17 GMT
ஜப்பான் துறைமுகத்தில் உள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 பயணிகள் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர்.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு படிப்படியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன.

இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

கப்பலில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டது. இதில் 624 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சீன அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் கப்பலில் பயணிகள் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். 80 வயது உடைய ஆண் மற்றும் பெண் இருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே சொகுசு கப்பலில் கொரோனா தொற்று இல்லாத பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று 443 பேர் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இன்று மேலும் பயணிகள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகளை கப்பலில் இருந்து வெளியேற்றும் பணி முடிய 3 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பயணி ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் கூறும்போது, “கப்பலில் வைரஸ் பரவிய பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தடைகள் விதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் பரவ வசதியாகி விட்டது. நான் ஏபோல வைரஸ் ஆப்பிரிக்காவில் பரவிய போது அங்கு இருந்தேன்.

2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் சீனாவில் பரவிய போது அங்கு இருந்தேன். அப்போதெல்லாம் பயப்படவில்லை. ஆனால் கப்பலில் இருந்தபோது மிகவும் பயந்தேன். ஏனென்றால் வைரஸ் கப்பலில் எங்கு உள்ளது என்று சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது என்றார்.

ஆனால் அதை ஜப்பான் சுகாதார துறை மந்திரி காதோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறும் போது, நிபுணர்கள் மூலம் கப்பலில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடினமான சூழ்நிலையில் எங்களது சிறந்த பணியை அளித்து கொண்டிருக்கிறோம். எங்களது சுகாதார துறை அதிகாரிகள் மட்டுமல்ல பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களும் கடுமையாக உழைத்து வருகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

மேலும் கப்பலில் இருந்த பயணிகளுக்கு எப்படி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். எவ்வளவு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஊழியர்கள் விளக்கும் அளிக்கம் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News