செய்திகள்
துப்பாக்கிச்சூடு நடந்த பகுதி

தாய்லாந்தில் வணிக வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - பெண் பலி

Published On 2020-02-19 11:09 GMT   |   Update On 2020-02-19 11:09 GMT
தாய்லாந்து நாட்டில் உள்ள வணிக வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
பாங்காக்:

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாகோன் ராட்சசிமா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த 8-ம் தேதி ராணுவ வீரர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாங்காங் நகரின் டவுண்டவுன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் அங்கு காஸ்மெட்டிக் கிளினிக் பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட டனுஷோர்ன் (28) என்ற நபரை கைது செய்தனர். போலீசாரிடம் ‘‘துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் தனது முன்னாள் மனைவி. அவர் வேறு ஒரு ஆண் நபருடன் பழகி வந்ததால் ஆத்திரமடைந்து சுட்டுக் கொன்றதாக’’ குற்றவாளி ஒப்புதல் அளித்துள்ளான். வணிக வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாங்காக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News