செய்திகள்
தீயில் இருந்து குடும்பத்தினர் காப்பாற்றிய சிறுவன்

அமெரிக்காவில் தீயில் இருந்து குடும்பத்தினர் 7 பேரை காப்பாற்றிய சிறுவன்

Published On 2020-02-17 01:12 GMT   |   Update On 2020-02-17 01:12 GMT
அமெரிக்காவில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்திலிருந்து சிறுவன் நோவ் துரிதமாக செயல்பட்டு தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரையும் காப்பற்றியது ஆச்சரியமடைய வைத்தது.
நியூயார்க்:

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் பார்டவ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு படுக்கையறையில் திடீரென தீப்பிடித்தது.

அந்த அறையில் தனது தங்கையுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுவனான நோவ் வூட்ஸ், அறையில் தீப்பற்றி எரிவதை ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டான். ஆனால் அவன் தீயை கண்டு அலறவோ அல்லது பதற்றமடையவோ இல்லை.

மாறாக தீயில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற துரிதமாக செயல்பட்டான். தன்னுடன் தூங்கி கொண்டு இருந்த தனது 2 வயது தங்கையை எழுப்பிய நோவ், அவளை ஜன்னல் வழியாக வெளியே அனுப்பினான். அந்த அறையில் இருந்த தனது செல்லப்பிராணியான நாய் குட்டியையும் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசினான்.

பின்னர் சற்றும் தாமதிக்காமல் பக்கத்து அறையில் தூங்கி கொண்டு இருந்த தன்னுடைய மாமா உள்ளிட்ட மற்ற அனைவரையும் எழுப்பினான். தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட அவர்கள் வீட்டில் ஏற்பட்ட விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக சிறுவனையும் தூக்கிக்கொண்டு வெளியேறினர்.

அதன் பிறகு தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து, வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். சிறுவன் நோவ் துரிதமாக செயல்பட்டு தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரையும் காப்பற்றியதை அறிந்து தீயணைப்பு வீரர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இதையடுத்து, பார்டவ் நகர தீயணைப்புத்துறை நிர்வாகம் சிறுவன் நோவுக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்தது.
Tags:    

Similar News