செய்திகள்
தாக்குதல் நடந்த பகுதி தீப்பிடித்து எரியும் காட்சி

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்

Published On 2020-02-16 11:39 GMT   |   Update On 2020-02-16 11:51 GMT
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்தாத்:

ஈரான் நாட்டு தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்ற போது அவரை அமெரிக்க படையினர் ஏவுகணைகளை வீசி தாக்கி கொன்றனர்.

இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மற்றும் தூதரகத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதில் ஏவுகணை தவறுதலாக உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை தாக்கியதில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன்பின் இரு நாடுகள் இடையே பதற்றம் சற்று குறைந்தது.

இந்தநிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று அதிகாலை ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த பசுமை மண்டலத்தில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன.

அப்பகுதியில் பல ஏவுகணைகள் வீசப்பட்டன. அதனால் ஏற்பட்ட கட்டிட சேதங்கள் பற்றி உறுதியான தகவல் ஏதும் தெரியவில்லை. ஏவுகணை தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்று முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப் பேற்கவில்லை. ஆனால் ஈரான் பின்னணியில் உள்ள குழுக்கள் தான் தாக்குதலை நடத்தி உள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஈராக்கில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து 19 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News