செய்திகள்
மெலனியா டிரம்ப்

இந்திய பயணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் - மெலனியா டிரம்ப்

Published On 2020-02-13 13:40 GMT   |   Update On 2020-02-13 13:40 GMT
இந்திய சுற்றுப்பயணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பரில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற டிரம்ப் இந்தியா வர சம்மதம் தெரிவித்தார்.
 
இதையடுத்து, டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இத்தகவலை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த பயணத்தில் டெல்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கும் டிரம்ப், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கும் செல்கிறார். அங்கு மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மிகப்பெரும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் மோடியுடன் இணைந்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், மோடி ஒரு மிகச்சிறந்த மனிதர். இந்தியாவுக்கு செல்வதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மெலனியா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியா வருமாறு அழைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியா செல்ல மிக ஆவலாக எதிர்நோக்கி உள்ளேன். இரு நாட்டு உறவும் வலுப்பெறும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்திய வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News