செய்திகள்
பனொரமா ரிசார்ட்

8 இந்தியர்கள் பலியான ரிசார்ட்டை மூடியது நேபாள அரசு

Published On 2020-02-12 07:25 GMT   |   Update On 2020-02-12 07:25 GMT
நேபாள நாட்டின் பனொரமா ரிசார்ட்டில் மூச்சுத்திணறல் காரணமாக 8 இந்தியர்கள் பலியானதை தொடர்ந்து அந்த ரிசார்ட்டின் உரிமத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
காத்மண்டு:

நேபாள நாட்டில் உள்ள பிரபல மலை சுற்றுலாத்தளமான போகாராவிற்கு கேரளாவைச் சேர்ந்த 15 சுற்றுலாப்பயணிகள் கடந்த மாதம் சென்றிருந்தனர். அவர்கள் மகவான்பூர் மாவட்டத்தின் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனொரமா ரிசார்ட்டில் (சொகுசுப்  பங்களா) ஜனவரி 20ம் தேதி தங்கினர்.

4 அறைகள் முன்பதிவு செய்திருந்த போதிலும், ஒரு அறையில் 8 பேரும், மீதமுள்ள அறையில் மற்ற 7 பேரும் தங்கினர். மறுநாள் காலையில் முதல் அறையில் தங்கியிருந்த 8 பேரும் மயங்கி கிடந்தனர். 

பொதுவாக  குளிரான அப்பகுதிகளில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அறையை வெதுவெதுப்பாக வைத்திருக்க கேஸ் ஹீட்டர்கள் இருப்பது வழக்கம். ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அறையில் உள்ள கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் அனைவரும் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேஸ் ஹீட்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அவர்கள் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த பனொரமா ரிசார்ட்டின் உரிமத்தை 3 மாதங்களுக்கு நேபாள அரசு ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மோசமான பாதுகாப்பு மேலாண்மை மற்றும் ரிசார்ட்டின் நிர்வாக பலவீனம் காரணமாகவும், விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலும் பனொரமா ரிசார்ட்டின் உரிமத்தை நேபாள சுற்றுலா துறை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
Tags:    

Similar News