செய்திகள்
சிரியா தாக்குதல்

சிரியாவில் அரசு படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 20 பேர் பலி

Published On 2020-02-10 21:20 GMT   |   Update On 2020-02-10 21:20 GMT
சிரியாவில் அரசு படை நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 20 பேர் பலியாகினர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத் தலைமையிலான அரசு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 9 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் அதிபரின் அரசு படைக்கு ரஷிய ராணுவம் பக்கபலமாக இருந்து வருகிறது. ரஷிய படைகளின் உதவியோடு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நகரங்களை சிரிய ராணுவம் மீட்டு விட்டது.

தற்போது நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணம் மட்டுமே கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த மாகாணத்தின் சரி பாதிக்கும் அதிகமான பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளன.

மேலும் அண்டை மாகாணமான அலெப்போவின் மேற்கு பகுதிகள் சிலவற்றையும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அனைத்து பகுதிகளையும் மீட்க சிரிய ராணுவம் போராடி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சிரிய ராணுவம் ரஷிய படைகளின் உதவியோடு இத்லிப் மாகாணத்தில் தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த போரில் அரசு படை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களை அரசு படைகள் அடுத்தடுத்து மீட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை இத்லிப் மாகாணத்தின் சாராகெப் நகரை அரசு படை கைப்பற்றியது.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள நாட்டின் முக்கிய நெடுஞ்சாலையை மீட்கும் தீவிர முயற்ச்சியில் அரசு படை இறங்கி உள்ளது. இந்த நெடுஞ்சாலை தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான அலெப்போவை இணைக்கும் சாலையாகும்.

இந்த நெடுஞ்சாலை மீட்கப்பட்டால் அது அரசு படைக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும். அதே சமயம் இந்த பகுதியை இழப்பது கிளர்ச்சியாளர்களுக்கு பெரும் பின்னடைவாக அமையும். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் முக்கிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பகுதியில் நேற்று முன்தினம் அரசு மற்றும் ரஷிய படைகள் தரை வழியாகவும், வான்வழியாகவும் பயங்கர தாக்குதல்களை நடத்தின. இந்த தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 20 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை சிரியாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைகளின் மோதல் காரணமாக அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள், கூட்டம் கூட்டமாக வெளியேற தொடங்கி உள்ளனர். அவர்கள் நாட்டின் வடக்கே துருக்கியின் எல்லையையொட்டிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் முதல் இத்லிப் மாகாணத்தில் நடந்து வரும் மோதல் காரணமாக இதுவரை 5 லட்சத்து 86 ஆயிரம் பேர் தங்களின் வாழ்விடத்தை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:    

Similar News