செய்திகள்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர் சுட்டதில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி

Published On 2020-02-09 20:35 GMT   |   Update On 2020-02-09 20:35 GMT
ஆப்கானிஸ்தான் ராணுவ சீருடையில் இருந்த நபர் ஒருவர் திடீரென அமெரிக்க வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு, அமெரிக்க படைகள் பக்கபலமாக இருந்து வருகின்றன. தற்போது சுமார் 13 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைவீரர்கள் தலீபான் பயங்கரவாதிகளால் தொடர்ந்து குறிவைக்கப்படுகின்றனர். எனவே அங்குள்ள தங்கள் படை வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் நங்கார்ஹர் மாகாணத்தில் உள்ள ஷெர்சாத் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் வீரர்களும், அமெரிக்க வீரர்களும் இணைந்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆப்கானிஸ்தான் ராணுவ சீருடையில் இருந்த நபர் ஒருவர் திடீரென அமெரிக்க வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் 3 பேரும் காயம் அடைந்தனர்.

இது குறித்து, மாகாண கவர்னர் ஷா மஹ்மூத் மேயாகில் கூறுகையில், “இது பயங்கரவாதிகளின் ஊடுருவலா, விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்டதா என்பது உடனடியாக தெரியவில்லை. அதே சமயம் இது இரு தரப்புக்கும் இடையிலான மோதல் இல்லை. இது குறித்து நாங்கள் தீவிரமாக விசாரிக்கிறோம்” என கூறினார். 
Tags:    

Similar News