செய்திகள்
கோப்பு படம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பொது இடத்தில் தூக்கு - பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானம்

Published On 2020-02-08 17:21 GMT   |   Update On 2020-02-08 17:21 GMT
குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்ற தீர்மானம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி கொலை செய்யும் சம்பவங்களும் சமீபகாலமாக பாகிஸ்தானில் அதிகமாக உள்ளது. 

இதற்கிடையில், கடந்த 2018-ம் ஆண்டு அந்நாட்டின் ஹைபர்-பக்துவா மாகாணத்தின் நவ்ஷாரா பகுதியை சேர்ந்த 8 வயது நிரம்பிய சிறுமி மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றம், கொலை போன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை இருக்கும்போதும் இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னர் தண்டனைகள் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல், குழந்தைகளை கொலை செய்தல் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. 

இது தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

இதனால் தீர்மானத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பொது இடத்தில் தூக்கிடும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டால் குற்றங்கள் குறையும் என ஒரு தரப்பினர் தெரிவித்தாலும், சமூக ஆர்வலர்களும், மனித உரிமைகள் ஆர்வலர்களும் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News