செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்கர் ஒருவர் உயிரிழப்பு

Published On 2020-02-08 07:25 GMT   |   Update On 2020-02-08 07:25 GMT
கொரோனா வைரஸ் தொற்று நோயின் காரணமாக சீனாவின் வுகான் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
பீஜிங்:

கொரோனா வைரஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமல்லாது, தைவான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஜப்பான் உள்பட மொத்தம் 23 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சீனாவில் மட்டும் இதுவரை 724 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நோயின் காரணமாக சீனாவின் வுகான் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.   

‘கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவின் வுகான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான அமெரிக்கர் ஒருவர் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி இறந்துவிட்டார். அவரது பிரிவால் வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’ என அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். 
Tags:    

Similar News