செய்திகள்
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில்

கொரோனா வைரஸ் தாக்குதல் - சவுதி அரேபியாவும் சீனாவுக்கு செல்ல தடை விதித்தது

Published On 2020-02-06 20:37 GMT   |   Update On 2020-02-06 20:37 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 563 ஆக உயர்ந்தது. சவுதி அரேபியாவும் சீனாவுக்கு செல்ல தடை விதித்தது.
பீஜிங்:

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை 563 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 28,018 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் 640 பேருக்கு கடுமையான காய்ச்சல் உள்ளது. 3,859 பேர் தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளனர்.

ஏற்கனவே வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த 2.82 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில் இன்னும் 1.86 லட்சம் பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

ஹாங்காங்கில் 21 பேருக்கும், மெக்கவில் 10 பேருக்கும், தைவானில் 11 பேருக்கும் வைரஸ் தாக்குதல் உள்ளது. வெளிநாடுகளில் இதுவரை 182 வைரஸ் தாக்குதல் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

உகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதல் நோயாளிகளுக்காக 10 நாட்களில் 1,500 படுக்கைகள் கொண்ட கூடுதல் சிறப்பு ஆஸ்பத்திரி கட்டப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை தொடங்கியுள்ள நிலையில் 1,000 படுக்கைகள் கொண்ட மற்றொரு சிறப்பு ஆஸ்பத்திரியும் நேற்று திறக்கப்பட்டது. அங்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை தொடங்கியது.

இதுதவிர விளையாட்டு மையங்கள், கண்காட்சி அரங்குகள் உள்ளிட்ட 132 தனிமைப்படுத்தப்பட்ட பொது இடங்களை தற்காலிக ஆஸ்பத்திரிகளாக மாற்றியுள்ளனர். இங்கு 12,500 படுக்கைகள் உள்ளன. கூடுதல் ஆஸ்பத்திரிகள் திறக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

‘ரெம்டெசிவிர்’ என்ற கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தின் திறனை அறிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து விரைவில் சீனாவுக்கு வரும் என்றும் மருத்துவ அதிகாரிகள் கூறினர். இந்த மருந்து வெளிநாடுகளில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டது.

ஏற்கனவே பல நாடுகள் சீனாவுக்கு செல்ல தங்கள் குடிமக்களுக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் சவுதி அரேபியா அரசு தங்கள் குடிமக்களும், இங்கு வசிப்பவர்களும் சீனாவுக்கு செல்ல தடை விதித்தது. இந்த உத்தரவை மீறி யாராவது சீனா சென்றால் அவர்கள் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு திரும்பிவர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் உத்தரவில் கூறியுள்ளது.
Tags:    

Similar News