செய்திகள்
போராட்டத்தில் பங்கேற்ற ஆப்கானிஸ்தானியர்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டம்

Published On 2020-02-06 04:06 GMT   |   Update On 2020-02-06 04:06 GMT
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து தலையிடுவதற்கு எதிராக காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகில் ஆப்கானிஸ்தானியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தான் விவகாரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து தலையிடுவதற்கு எதிராக காபூலில் நேற்று போராட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான ஆப்கானிஸ்தானியர்கள் பங்கேற்று, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். 

பாகிஸ்தான் ஒழிக, பாகிஸ்தான் எதிரி என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். மேலும், பாகிஸ்தானில் உள்ள பஷ்தூன் இன மக்களின் பாதுகாப்புக்காக போராடும், பஷ்தூன் தகாபுஸ் இயக்க தலைவர் மன்சூர் பஷ்தீனை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5 ஆம் தேதி காஷ்மீர் ஒற்றுமை தினம் என்ற பெயரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இந்த ஆண்டும் அதேபோன்று பாகிஸ்தான் தூதரகம் சார்பில் காபூலில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தது. 

இந்தியாவின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடும் வகையில் பாகிஸ்தான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இருந்ததால், அந்த நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்திருந்த அரங்கத்தை, ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் உறுதியற்ற தன்மையை உருவாக்குவதற்காக, தலிபான் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஆதரிப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
Tags:    

Similar News