செய்திகள்
விபத்து நிகழ்ந்த பள்ளிக்கூடம்

கென்யாவில் பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசல் - 13 மாணவர்கள் பலி

Published On 2020-02-04 19:34 GMT   |   Update On 2020-02-04 19:34 GMT
கென்யாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியேறிய மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
நைரோபி:

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள ககமிகா நகரில் தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கு நெரிசல் ஏற்பட்டது.

இதில் மாணவர்கள் பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். மேலும் சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு சரிந்தனர். இந்த கோர சம்பவத்தில் 13 மாணவர்கள் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். நெரிசல் எதனால் ஏற்பட்டது, மாணவர்கள் பீதியடைந்து ஓடியது ஏன் என்பது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கென்யாவில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், அங்கு பள்ளிகளின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tags:    

Similar News