செய்திகள்
சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா

இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது- ஐஎம்எப் தலைவர் நம்பிக்கை

Published On 2020-01-25 03:11 GMT   |   Update On 2020-01-25 03:11 GMT
இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானதுதான் என கூறிய சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா, இந்த நிலையை மேம்படுத்தி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவதற்கான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
தவோஸ்:

சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் நேற்று (ஐஎம்எப்) சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உரையாற்றினார். அப்போது உலக நாடுகளின் பொருளாதார நிலைகளை அவர் எடுத்துரைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சர்வதேச நிதியம் எதிர்பார்த்ததை விட 2020-ம் ஆண்டு ஜனவரியில் உலக நாடுகள் சற்று சிறந்த நிலையில் உள்ளன. சீனா-அமெரிக்கா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச அளவிலான வர்த்தக பதற்றம் விலகியது மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வரி குறைப்புகள் போன்ற நடவடிக்கைகளால் இந்த நேர்மறையான காரணிகள் நடந்துள்ளன’ என்று தெரிவித்தார்.

மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானதுதான் என நம்புவதாக கூறிய கிறிஸ்டலினா, இந்த நிலையை மேம்படுத்தி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவதற்கான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளில் சில பிரகாசமான வாய்ப்புகள் தெரிவதாகவும், ஆப்பிரிக்க நாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். எனினும் மெக்சிகோ போன்ற சில நாடுகள் பின்தங்கி இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

Tags:    

Similar News