செய்திகள்
வாய்க்கவசம் அணிந்திருக்கும் சீனா மக்கள்

சீனாவில் கொரோனா வைரசுக்கு 4வது நபர் பலி- உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டம்

Published On 2020-01-21 05:36 GMT   |   Update On 2020-01-21 05:36 GMT
சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 4வது நபர் பலியாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங்:

‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் தாக்கியவர்கள், கடுமையான சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். 

இந்த புதிய வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக முதலில் கூறப்பட்டது. இதையடுத்து மனிதர்களிடமிருந்தே மனிதரிடையே பரவும் என கண்டறியப்பட்டது. வுகான் நகரில், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 170 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 4வதாக ஒருவர் உயிரிழந்ததாக வுகான் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வுகான் நகரைச் சேர்ந்த 89 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

இந்த புதிய கொரோனா வைரஸ் மற்ற பகுதிகள் மற்றும் அண்டை நாடுகளில் பரவுவதற்கு முன்பு அதன் மூலத்தை கண்டறியுமாறு 
உலக சுகாதார அமைப்பு சீனா அரசை முன்னதாக வலியுறுத்தியிருந்தது. 

இந்நிலையில், புதிய கொரோனா வைரஸ் காய்ச்சலை, சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்கலாமா என்பதை தீர்மானிக்க ஒரு முக்கிய அவசர குழு வரும் புதன்கிழமை (நாளை) கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக சீனாவில் பல பகுதிகளில், பொதுமக்கள் அனைவரும் முகமூடி (வாய்க் கவசம்) அணிந்து செல்வதை காண முடிகிறது.
Tags:    

Similar News