செய்திகள்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் ஓலெக்ஸி

உக்ரைன் பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்

Published On 2020-01-18 03:29 GMT   |   Update On 2020-01-18 03:29 GMT
உக்ரைனில் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் கொடுத்த ராஜினாமா கடிதத்தை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிராகரித்ததுடன், அவரை பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
கீவ்:

உக்ரைன் நாட்டில் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை, பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் விமர்சித்ததாக வெளியான ஆடியோ, சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உக்ரைனின் பொருளாதாரம் குறித்து பிரதமர் ஒலெக்ஸி பேசியபோது, ‘அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு பொருளாதாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது’ என்று பேசியதாக அந்த ஆடியோவில் உள்ளது. 

ஆனால், அந்த ஆடியோவில் உள்ள தகவல் உண்மை இல்லை என்றும், செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் மறுப்பு தெரிவித்தார் பிரதமர் ஒலெக்ஸி. 

அதேசமயம், அதிபர் மீதான மரியாதை மற்றும் நம்பிக்கை குறித்த சந்தேகத்தை போக்குவதற்காக ராஜினாமா செய்வதாக கூறினார். ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் வழங்கினார்.

இந்நிலையில், பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமா கடிதத்தை பரிசீலனை செய்த அதிபர், ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்தார். அத்துடன், பிரதமர் ஒலெக்ஸியும், அவரது மந்திரிசபையும் பதவியில் நீடிக்கும்படி அதிபர் கேட்டுக்கொண்டார். 
Tags:    

Similar News