செய்திகள்
மரண தண்டனை

சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Published On 2020-01-14 21:29 GMT   |   Update On 2020-01-14 21:29 GMT
சவுதி அரேபியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ தெரிவித்துள்ளது.
ரியாத்:

உலகில் மிகக்கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா. அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன. இதில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரப்பட்டியலில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் உள்நாட்டினர் என்றும், 90 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் எந்த நாட்டினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ‘ரிப்ரீவ்’ தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி மட்டும் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 3 பேர் சிறுவர்கள் என்றும் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News