செய்திகள்
ஹசன் ரவுகானி

உக்ரைன் விமான விபத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - ஈரான்

Published On 2020-01-14 10:18 GMT   |   Update On 2020-01-14 10:18 GMT
உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவார்கள் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார்.
டெக்ரான்:

ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான ஈரானியர்கள் உள்பட 176 பேர் பலியாயினர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்கு காரணம் என ஈரான் முதலில் கூறியது.

ஆனால் உக்ரைன் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா ஆதாரத்துடன் கூறியது. அதன் பிறகுதான் அமெரிக்க போர் விமானம் என கருதி தவறுதலாக உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது. இந்த விவகாரத்தில் 3 நாட்களாக மக்களிடம் உண்மையை மறைத்ததாக கூறி டெக்ரானில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி பதவி விலக வேண்டும் எனவும் மாணவர்கள் சிலர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவார்கள் என அதிபர் ரவுகானி கூறியுள்ளார்.

‘உக்ரைன் விமான விபத்து சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இச்சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய அனைவரும், கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்’ என அதிபர் ரவுகானி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
Tags:    

Similar News