செய்திகள்
ஈரான் அதிபர்

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 176 பேர் பலி - ஈரான் அதிபர் பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்

Published On 2020-01-13 09:11 GMT   |   Update On 2020-01-13 09:11 GMT
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 176 பேர் பலியான நிலையில் ஈரான் அதிபரை பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெக்ரான்:

ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது.

இதில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான ஈரானியர்கள் உள்பட 176 பேர் பலியாயினர்.

இந்த விபத்துக்கு விமானத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என ஈரான் முதலில் கூறியது.

ஆனால் உக்ரைன் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா ஆதாரத்துடன் கூறியது.

அதன் பிறகுதான் அமெரிக்கா போர் விமானம் என கருதி தவறுதலாக உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது. இந்த விவகாரத்தில் 3 நாட்களாக மக்களிடம் உண்மையை மறைத்ததாக கூறி டெக்ரானில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெக்ரானில் உள்ள அமீர்கபீர் மற்றும் செரீப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறைக்க முயன்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

அஞ்சலி செலுத்துவதற்காக திரண்ட கூட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியதை கண்ட பாதுகாப்பு படையினர் அவர்களை கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து நகரவில்லை.

இதைத் தொடர்ந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியதால் முக்கிய பகுதிகளில் கலவரத்தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஈரான் ராணுவத்தின் உளவுப் பிரிவுத்தலைவர் காசிம் சுலைமானியை படுகொலை செய்த அமெரிக்காவை கண்டித்தும் பிற பகுதிகளில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News