செய்திகள்
வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

தைவானில் இன்று பொதுத்தேர்தல்- விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Published On 2020-01-11 05:27 GMT   |   Update On 2020-01-11 05:27 GMT
தைவானில் அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தைபே:

தைவான் நாட்டில் அடுத்த அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 19.3 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய அதிபருமான சாய் இங்-வென் இரண்டாவது முறையாக அதிபர் பதவியை பிடிக்க களத்தில் இறங்கி உள்ளார். அவருக்கு எதிராக சீனா ஆதரவு கட்சியான கொமிந்தாங் கட்சியின் ஹான் கோயு, பீப்பிள் பர்ஸ்ட் கட்சியின் ஜேம்ஸ் சூங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருப்பினும் சாய் இங்வென்னுக்கும், ஹான் கோயுவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தன்னை ஜனநாயகத்தின் சாம்பியனாக சித்தரித்து, மக்களிடம் வாக்கு கேட்டார் அதிபர் சாய் இங்வென். தைவானில் சீனாவின் தலையீட்டை அவர் விரும்பவில்லை. 

அதேசமயம், எதிர்க்கட்சி வேட்பாளர் ஹான் கோயு, தான் வெற்றி பெற்றால் சீனாவுடனான பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
Tags:    

Similar News