செய்திகள்
டிரம்ப்

ஈரான் மீது போர் தொடுப்பதிலிருந்து டிரம்பை கட்டுப்படுத்தும் தீர்மானம்

Published On 2020-01-11 01:52 GMT   |   Update On 2020-01-11 01:52 GMT
ஈரான் மீது அமெரிக்கா போர்த்தொடுப்பதை தவிர்க்க, ஜனாதிபதி டிரம்பின் ராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
வாஷிங்டன் :

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 3-ந்தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா போர்த்தொடுப்பதை தவிர்க்க, ஜனாதிபதி டிரம்பின் ராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்தனர்.

அந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஜனநாயக கட்சியினருடன் சேர்ந்து டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த 3 பேரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதன்படி தீர்மானத்துக்கு ஆதரவாக 224 ஓட்டுகளும், எதிராக 194 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம் 30 ஓட்டுகள் வித்தியாசத்தில் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தால் அல்லது அவசியம் ஏற்பட்டால் மட்டுமே ஜனாதிபதி டிரம்ப், ஈரானுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த முடியும் என இந்த தீர்மானம் கூறுகிறது.

எனினும் இந்த தீர்மானம் டிரம்பின் குடியரசு கட்சயினரை பெரும்பான்மையாக கொண்டுள்ள செனட் சபையில் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tags:    

Similar News